Monday, September 5, 2011

4. கலாச்சாரம்


4. கலாச்சாரம்


                ``கலாச்சாரத்தின் நம்பிக்கையில்தான் நாம் வாழ்கின்றோம்’’.

                மனித இனத்தின் இலக்கை அடைய பல கலாச்சாரங்கள் தோன்றின. இவை அனைத்தும் சூழ்நிலைகளால் புனிதத்தை இழந்த நிலையிலுள்ளன. அக்கலாச்சாரங்களினால் நம்முடைய உண்மையான குறிக்கோளைப் பற்றிய நினைவு போய்விட்டது. எஞ்சியிருப்பவை பயனற்ற குருட்டுத்தனமான பழக்க வழக்கங்கள் மட்டுமேயாகும். மனித சமுதாயம் தன்னுடைய கலாச்சாரத்தின் நம்பிக்கையிலும், செயல்பாடுகளிலும் பின்னிப் பிணைந்துள்ளது. இது கலாச்சாரத்திலிருந்து பிரிக்க முடியாதபடி ஒன்றிக் கலந்துவிட்டது.

                கலாச்சாரத்தின் சடங்குகளும், அதன் வழிமுறைகளும் தம் உண்மையான உட்பொருளை இழந்து விட்டாலும் கூட அவற்றைப் பெரிதாக மதித்துப் போற்றுகின்ற வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு சடங்குகளுக்கு மரியாதை செலுத்தும் பொழுது நாம் எடுத்துக் கொள்கின்ற முயற்சியைத் தவிர வேறு பயன் ஒன்றையும் அவை தருவதில்லை. கலாச்சாரத்தில் உயர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு நபர் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதாகவும், கேள்விக்குப் பதில் இருப்பதாகவும் பாவனை செய்கின்றார். அதில் உண்மை இல்லை.

                பிரச்சனைகளில் இருந்து விடுதலைப் பெறத் தோன்றியதே கலாச்சாரத்தால் தான் ஆகும். ஆனால் இன்றோ கலாச்சாரங்களே பிரச்சனையாக மாறிவிட்டது. கலாச்சாரத்தின் அறியாமை தான் உலகெங்கும் தலைவிரித்து ஆடுகிறது. இந்தக் கலாச்சாரத்தில் பரந்த பார்வை இல்லாததால் பிரச்சனைக்குக் காரணமாகிறது.

                கலாச்சாரங்கள் மனித வாழ்க்கையின் உண்மையான உட்பொருளை அடைய அந்தந்தக் காலத்திற்கு ஏற்றவாறு பல வழிமுறைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நமக்கு அது நம்பிக்கையளிப்பதால், நாம் நம்பிக்கை வைக்கிறோம். மேலும் செய்ததையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்கிறோம். மேலும் தொடர்ந்து நம்பிக்கையில் வாழ்நாளைக் கடத்தி இறுதியில் விரக்தியடைந்து மடிகின்றோம்.

                கலாச்சாரங்கள் மேன்மையானது, புனிதமானது, தெய்வீகமானது என்று நீங்கள் நினைப்பவை எல்லாமே உங்கள் உணர்வு நிலையின் அழுக்குதான். அந்த அழுக்கு நம்மிடம் உள்ள இயல்பு நிலையை வெளிப்படுத்தாமல் தடுக்கிறது. அங்கு இருப்பவை எல்லாம் ஏற்கெனவே இருப்பவைதான். மனித மரபியல் சக்தியில்கூட நாம் ஒரு பகுதியை உபயோகிக்கிறோம். ஏதோ பரிபூரணமாக பரிணமிக்கக் கூடிய வாய்ப்பை கலாச்சாரம் தடுத்துவிடுகிறது.

                மனிதர்கள் ஆர்வம் கொண்டிருப்பதெல்லாம் பிரச்சனைகளுக்கான சில பதில்களுக்கு அல்ல. சில ஆறுதல் தருபவை மட்டுமே. இவை வலி நிவாரண மாத்திரையே தவிர மருந்தாகாது. இவற்றை விற்று உங்களை சௌகரியமாக உணரச் செய்கிறார்கள். இந்த கலாச்சாரத்தால் பிரச்சனைகளை உருவாக்க மட்டும்தான் முடியும். அவற்றைத் தீர்க்க முடியாது.

                உங்களைச் சுற்றிலும் உள்ள எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் மட்டுமே மாற்றத்தை விரும்பாமல் அதைப் பற்றிப் பேசிக் கொண்டு காலத்தை விரையம் செய்கின்றீர்கள். அதை நீங்கள் கலாச்சாரம் என்று அழைக்கிறீர்கள்.

                இவ்வாறு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நாம் பின்பற்றி வந்த குருமார்களும், வழிகாட்டிகளும், புனித நல்லோர்களும் தாங்கள் இயற்றிய நூல்களைக் கொண்டு குழந்தைகளைப் பாலூட்டி வளர்ப்பது போல நமக்கு அறிவு ஊட்டி வளர்த்து வந்துள்ளனர். அதாவது, நமது வாழ்க்கை ஊட்டம் பெறுவதெல்லாம் அவர்களின் சொற்களின் மூலம்தான். இதனால் நமக்குச் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் வளரமுடியாமல் அவர்களைச் சார்ந்தே இருக்கின்றோம்.

                ஆறாவது அறிவான பகுத்தறிவும் சிந்தனையைத் தாண்டி வெளிவர முயல்கிறது. அதைக் கலாச்சாரம் அழுத்தி விடுகிறது.

                கலாச்சாரத்தை வெளியே தூக்கி எறிந்துவிட்டால் அது தன் வழியில் தன்னை வெளிப்படுத்துகிறது. மூடநம்பிக்கைகளை விரட்டி அடியுங்கள். அறியாமையை கொண்டு செல்ல வேண்டிய தேவை உருவாகியுள்ளது. இதன் பிடியிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டால் உடலின் உணரும் இயல்புணர்வில் இயல்பான செயல்முறைகளை மட்டுமே நீங்கள் கொண்டிருப்பீர்கள். இதனால் உயரிய சிந்தனை ஏற்பட்டு இதன் தன்னியல்பை அறிந்து கலாச்சாரத்தின் புனிதத்தை அறியச் செய்கிறது.

                நம்முடைய இயல்பை புரிந்து கொள்ளும்போது தான் கலாச்சாரங்களிடையே நிலவுகின்ற சண்டைகளும், பூசல்களும் கருத்து வேறுபாடுகளும் மறையும். அப்போது இயல்பைப் பற்றிய ஓர் நிஜமான அனுபவம் ஏற்படும்.

                ``தன்னியல்பு நிலை அனைவரிடத்திலும் மலரும் போது இந்தக் கலாச்சாரம் தனது கட்டமைப்பிலிருந்து அதை வெளியே தள்ளி புனிதமான இயல்பு உணர்வை அறியச் செய்து, நமது இயல்பான ஏழாவது அறிவின் மாற்றத்தால் புனித கலாச்சாரம் திரும்புகிறது’’.
                      

No comments:

Post a Comment