Monday, September 5, 2011

7. ஆறறிவு


7. ஆறறிவு

                ``ஆறறிவுக் கொண்டு மனிதன் சுகமாக வாழ்கின்றான்’’.

                உலகம் தோன்றியபோதே அதில் உயிரினங்கள் தோன்றின. இந்த உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியாக மனிதன் தோன்றினான். உயிரனங்கள் அத்தனையும் இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக்க அப்படியே உள்ளது உள்ளவாறு துய்க்கின்றது. ஆனால் மனிதன் இயற்கையில் உள்ளவற்றை உருமாற்றி அனுபவிக்கிறான். காரணம் மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் உள்ளது. வேறு எந்த உயிரினங்களுக்கும் சிந்தித்துச் செயல்படும் திறன் இல்லை. எந்த ஜுவராசிக்கும் கிடைக்காத ஆறாவது அறிவு, அதாவது சிந்தனை செய்யும் திறன் மனிதனுக்குக் கிடைத்துள்ளது.

                ஆதி மனிதன் சிந்தனையால் வேட்டையாடியும், குகைக்குள் வாழ்ந்தும் வந்தான். பிறகு கூட்டமாக இருந்து விளை நிலங்களைப் பயிர் செய்தல், அவற்றைச் சேகரித்தல், கால்நடைகளை மேய்த்தல் போன்ற கடினமான செயல்களைச் செய்தான். ஆறறிவு சிந்தனை மாற்றங்களால் இன்று வீடுகளாகவும், மாளிகைகளாகவும், சாலையாகவும், புதிய புதிய வளர்ச்சிகளாக காட்சியளிக்கின்றன. இவையெல்லாம் மனித மனத்தில் சிந்தனையாகத் தோன்றியவை. இந்த நடைமுறை அனுபவங்களே சாதனைகளாக உருப்பெற்றன. சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்கு மனிதன் மாறுகின்றது. இதனால் மனித வாழ்க்கையில் பெருமளவில் வேறுபாடுகள் தோன்றியுள்ளன. இதனால் மனிதர்கள் ஒவ்வொருவரும், அந்தச் சிந்தனைக்கு ஏற்றாற் போல் தமக்கென ஒரு வளையத்தை அமைத்துக் கொண்டு அதற்கேற்ப வாழ்கின்றான்.

                மனிதன் மிருகத்திலிருந்து வேறுபட்டவன் அல்ல என்கின்ற உண்மையை ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை. மனிதன் சிந்திக்கின்றான் என்பதுதான் ஒரே வித்தியாசம்.

                ஆறறிவோடு இன்று நாம் வாழும் வாழ்க்கை ஏற்கனவே வகுத்து வைத்த வாழ்க்கை நெறியினைப் பின்பற்றியதுதான். அதனால் நமது நடத்தையும், நினைவும் இயந்திரம் போல இயங்கிச் சிந்தனையின்றிச் செயலாற்ற நேரிடுகின்றது. வாழ்க்கையில் காண்பதெல்லாம் மாபெரும் குழப்பங்கள், வன்முறைச் செயல்கள், எதிர்ப்புகள், போர்கள், போராட்டங்கள், சமயம், நாடு என்ற அடிப்படைகளில் கணக்கற்ற பிளவுகள். இவை அனைத்தும் ஆறறிவு சிந்தனையால் உருவானவையாகும். நமக்கு என்ன கிடைத்திருக்கிறதோ அதைப் பற்றி நாம் அதிகம் எண்ணிப் பார்ப்பதில்லை. எது நம்மிடம் இல்லையோ அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கின்றோம்.

                கணவன், மனைவி, குழந்தை, நாடு, வீடு, தலைவர்கள்
அரசியல்வாதிகள், தெய்வங்கள் இவை அனைத்தையும் பற்றிய கற்பனை சிந்தனையின் உருவங்களே. இந்தக் கற்பனைக்கு காரணமான சிந்தனையின் உருவங்கள், உங்களுக்கும் நீங்கள் காணும் பொருளுக்கும் இடையே உள்ள இடைவெளியினைத் தோற்றுவிக்கின்றன. அந்த இடைவெளியினால் போராட்டம் நிகழ்கிறது. ஆகவே இனி நாம் ஒன்று சேர்ந்து கண்டுபிடிக்க இருக்கும் முடிவுகளால், அந்த இடைவெளியினின்றும் விடுதலைப் பெற முடியுமா? என்று முயலவேண்டும். அவ்விடுதலைப் புறத்தில் மட்டுமின்றி அகத்தின் சிந்தனை அனைத்திலும் பிரித்து வைக்கும் இடைவெளியை உயரிய சிந்தனைகளால் குறைத்து இடைவெளியினின்றும் விடுபடுதல் என்பதுதான். ஆறறிவு முற்றிலும் பயனற்ற வகையில் செயல்படும் சிந்தனையின் தன்மையை ஆராய்ந்து மேம்படுத்த வேண்டும்.

                ஆறறிவு மனிதன் என்று தலைமுறை தலைமுறையாக அதையேதான் நாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். இதனால் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அது உண்மையில் நமக்கு உதவவில்லை. மேலும் ஒரு பிரச்சனையிலிருந்து நாம் விடுபட்டு விட்டால், மற்றொன்றை நாம் உருவாக்குகிறோம். நாம் யார், எங்கிருந்து வந்தோம்? எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? எங்கே போக வேண்டும் என்று எதுவும் தெரியாத நிலையில்  ஆறறிவால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

                ஆறறிவுச் சிந்தனையால் பல அற்புத கண்டுபிடிப்புகளைப் புதிது, புதிதாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். இதனால் மனித வாழ்க்கையில் வசதிகள் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் புறப்பொருட்களின் மீது பற்றை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்கின்றோம். ஆனால் இவைகள் தகவல்களே தவிர உண்மையறிவு ஆகாது. இந்த ஆறறிவால் பிரச்சனைகளை நாம் உருவாக்கியுள்ளோம். அதனால் அவற்றைத் தீர்க்க முடியாது.

                ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நாம் கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை வீணாக்க வேண்டாம். ஆறறிவை கடந்தாக வேண்டிய காலக் கட்டத்தில் நாம் உள்ளோம். ஆறறிவு படைத்த மனிதப் பிறவியில் மட்டும்தான் ஆறறிவைத் தாண்டிச் செல்ல முடியும். இந்த அறிவால் மட்டும் ஆத்ம சாதனை செய்ய முடியும்.

                அறிவால் மனிதனின் இறுதிக் காலக் கட்டத்தில் அவனது சிந்தனைகள் மரணத்தோடு ஒரு முடிவுக்கு வந்து விடுகின்றது. எனவே நாம் சிந்தனைகளை உயரிய சிந்தனைகளாக அமைத்து மேன்மையடையலாம்.

                ஆறறிவுள்ள மனிதன் பணம், அதிகாரம், காமம், காதல், ஆன்மீக அனுபவம், உண்மை போன்ற இவற்றை தேடுவதுதான் அவனது நிலையாகி விடுகிறது. இதன் உண்மை தன்னிடமுள்ள உணரும் இயல்புணர்வை உணரும் போது நம்மை சுற்றியுள்ள நிலைகளை தெளிவாக சிந்திக்க செய்கிறது.

                ``இயல்பான ஏழாவது அறிவின் சிந்தனையால் மனிதன் ஆறறிவு வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டு தன்னுடைய இயல்புணர்வால் குணங்களைச் செழுமைப்படுத்திக் கொள்வான். அதன் ஆற்றல் எல்லா செயல்களும் சரியான வழியில் நடைபெறச் செய்து வாழ்க்கையை முழுமையடையச் செய்கிறது’’.




No comments:

Post a Comment