Monday, September 5, 2011

9. இயல்பான ஏழாவது அறிவு


9. இயல்பான ஏழாவது அறிவு

                ``இயல்பான ஏழாவது அறிவைக் கொண்டு மனிதன் நிறைவாக வாழ்கின்றான்’’.

                ``இயல்பான இவ்வுயரிய சக்திகள் உயிரிலும், உடலிலும் வெளிப்பட்டது போலவே மனத்திலும் வெளிப்படுவதுதான் இயல்பான ஏழாவது அறிவாகும். இது உயரிய வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகை செய்கிறது’’.

                இயற்கையை வழிபடுவது தொன்றுதொட்டே இருந்து வந்த பழக்க மாகும். ஆதிகாலத்திலிருந்தே எல்லா மதங்களும், நாகரிகங்களும் இயற்கையை வழிப்பட்டு வந்துள்ளன. இயற்கையென்றால் ஏதோ நம் கண்முன்னே காணும் மரங்கள், ஆறுகள், மலைகள், கடல், வானம், செடி, கொடிகள் என்பது மட்டுமல்ல. இயற்கையென்றால் பிரபஞ்சம். இவ்வகையில் நம் கண்முன்னே வெளிப்பட்டு நாம் ஆச்சரியப்படும் வகையிலும், வெளிப்படா வகையிலும் இயற்கை இருவகையில் விளங்குகிறது. வெளிப்படாத தன்மை கொண்ட இந்த இயற்கை ஒவ்வொரு உயிரினத்திலும் ஒவ்வொரு இயல்புணர்வு கொண்டு படைத்துள்ளார். அதன் இயல்புணர்வை அறிந்து ஒவ்வொரு உயிரினமும் அதற்கெற்ப வாழ்ந்து வருகின்றது. சாலமன் மீன், செந்நிற நாரை போன்ற அனைத்து உயிரினங்களும் தன் இயல்பை ஒட்டியே வாழ்கின்றன. இதன் இயல்பு நிலை சிந்தனை குழப்பத்திற்கு அப்பாற்பட்டது. நேற்று என்றும் நாளை என்றும் அதற்கு இல்லை. அது ஆற்றல் வாய்ந்தது; உயிர்த்துடிப்புக் கொண்டது; இலக்கை அடைய வல்லது; ஒவ்வொரு பொருளுக்குள்ளும் அடங்கும் இயற்பாட்டைக் குறிப்பதுவே இயல்பு.

                நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை கவனித்தால் உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதை அறியமுடிகிறது. சூழ்நிலைப் போக்குகளை சமாளித்து நடந்துகொள்ள உயிரினங்களுக்கு அவற்றின் இயற்கையின் இயல்பு உணர்வு உதவுகிறது என்பது மட்டுமே நமக்கு நன்றாகத் தெரிகிறது. தங்கள் இலக்குகளைப் பற்றிய உணர்வு உயிரினங்களிடம் இயற்கையாகவே அமைந்திருக்கின்றன. இதன் அடிப்படையில் பார்த்தால் ஒருவிதத்தில் உயிரினங்கள் இலக்கை அடைவதற்கு இதன் இயல்புணர்வு செயல்படுவதாகச் சொல்லலாம்.

                இதே முறையில் நாம் வெற்றிக்கான வடிவமைப்பும் நம்மிடம் இருக்கிறது. நம் இலக்கை நோக்கி செலுத்துகின்ற அமைப்பு நம்மிடமும் அமைந்து இருக்கிறது. நம்முடைய சிந்தனைத் திறமையை வைத்துப் பார்க்கும் போது நம்முடைய மனமும், நாமும் (உடலும், உயிரும்) இணைந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. இப்படி இணைந்து செயல்படும் போக்குகளை நிர்ணயிப்பதைக் கொண்டு நமது சாதனைகளும் அதன் விளைவுகளும் ஏற்படுகின்றன. மனிதன் தன் இயல்புணர்வை அறிவதே மெய்யுணர்வைப் பெறுவதற்கு முதல் படியாகும்.

                புறப்பொருளின் அறிவை பெருக்கும் திறனை அதிகரிக்க முயல்கின்றோம். எத்தனை எத்தனை நூல்களைப் படிக்கின்றோம்; எத்தனைத் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை உற்றுக் காண்கிறோம்; எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றோம்; கூடிப் பேசுகின்றோம். இவைகளின் வாயிலாகப் பெறப்படும் செய்திகள், தகவல்களே தவிர உண்மையறிவு ஆகாது. நீங்கள் இயற்கையோடு தொடர்பு கொள்வீர்களானால் பறவை தன் சிறகினை அடித்துக் கொண்டு பறப்பதைப் பார்ப்பீர்களானால்; மலைச் சரிவுகளில் மோதும் மேகங்களை நோக்குவீர்களானால்; தென்றல் காற்று வீசுவதை அறிவீர்களானால் இதைப் போன்ற அனைத்திலும் உள்ள இயல்பை அறிந்தால் மனத்திற்கு ஒரு நிறைவு வந்து சேர்கிறது. இதன் நிறைவு அதிகரிக்க வேண்டுமானால் சிந்தனைகளை உயரிய சிந்தனைகளாக மாற்ற வேண்டும். உயரிய சிந்தனை என்பது புறப்பொருள்களின் சிந்தனைகளுடன் நமது அக வாழ்வுச் சிந்தனைகளும் இணைந்து மெய்யான தெளிவைப் பெறுவது ஆகும். இதனால் உள்ளபடி சிந்திக்கச் செய்கின்றது. இதனை உணர்வதற்கு மிக ஆழ்ந்த உயரிய சிந்தனைகளுடன் இயல்புணர்வைப் பற்றிய ஆராய்ச்சி தேவை.

                இயற்கையன்னையின் இயல்புணர்வு ஒரு சிறப்பான இயல்பான செயல்பாடாகும். அது பல வகையாக வகுக்கப்பட்ட, சிறப்பாக வரையறுக்கப்பட்ட ஒரு செயல்முறையாகும். இது சிந்தனைக்கு அப்பாற்பட்டது. ஒவ்வொருவருடைய நற்பண்புகளும், நல்லொழுக்கமுமே இவற்றின் மதிப்பீடுகளை நல்கும். இவற்றை நன்கு புரிந்து கொள்வதன் மூலம் இயல்புணர்வைப் பற்றிய உயரிய சிந்தனைகளை அறிய முடிகிறது. நம் செயல் அனைத்தும் கர்மயோக சேவையில் தெளிவடையச் செய்கிறது. இதனால் உலகில் வாழ்வது வெகு எளிமையானதாகவும், சுலபமானதாகவும் அமையும். இதனால் தன்னையே அறிந்து கொள்ளவும் தன்னையே அனுபவித்து உணர்ந்து கொள்ளவும் முடிகிறது. இது தன்னையே அறிந்து கொள்ளும் அறிவாகும். இதனால் மனிதன் மனித நிலையில் இருந்து உயர்ந்து அடுத்த நிலைக்குச் செல்லலாம்.
                                               
                இது சாதாரணமாக வெளிப்படாமல் உள்ளங்களிலிருந்தும் இயல்பான உணர்வுகளிலிருந்தும், உயரிய சிந்தனைகளின் வழியாகப் படிப்படியாக வளர்ந்து நிலையான இயல்புணர்வை அறிய செய்கிறது. இது வரையறுக்கப்பட்ட ஒரு செயல்முறை. அது மானிட குலத்தின் எதிர்கால வாழ்க்கைக்கு உயிரூட்டவல்ல மூலசக்தி. இப் பிறவியிலேயே அறிய வேண்டுமென்றால் நீங்கள் இந்த நிலையான இயல்புணர்வை உணரும் வரை ஓய்ந்து விடாதீர்கள்! ஒவ்வொருடைய  தனித்தன்மையாகிய இயற்கையின்  நம்மிடம் உள்ள உணரும் இயல்புணர்வை உணர வேண்டியுள்ளது. இது நிலையானது, மாற்றமற்றது. இதனால் அவனுடைய ஆசைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், கனவுகள், லட்சியங்கள், கோபம், மதிமயக்கம் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் இவை அனைத்தும் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இயல்பை மனத்திற் கொண்டு சென்று இயல்புணர்வால் இயற்கையின் சக்திகளை இயல்பாக உணர்வது தான் இயல்பான ஏழாவது அறிவாகும். இது வாழ்க்கையில் மனவளம் நிறைந்ததாக மாற்றி நிறைவாக வாழ வழிவகை செய்யலாம்.

                இயல்பான ஏழாவது அறிவு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள ஆழ்மனதில் உள்ள இயல்பான இயல்பாகும். இந்த இயல்பு நிலையில்தான் எதனையும் முழுமையாக அறிய முடியும். இது இயல்புணர்வு மூலம் ஆழ்மனதை இயக்கி மனித இனத்தின் இலக்கை அறிய முடியும்.

                ``இயல்பான ஏழாவது அறிவை சரியாக புரிந்து கொள்ளுதலே வாழ்க்கையில் தன் இயல்பை விரைந்து அறிவதற்கு சிறந்த வழி’’.


No comments:

Post a Comment