Monday, September 5, 2011

5. விஞ்ஞானம்


5. விஞ்ஞானம்


                ``விஞ்ஞானத்தால் மனிதன் வசதியாக வாழ்கின்றான்’’.

                விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் பிரச்சனைகளை முழுமை யாகத் தீர்க்க முடியாது. ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் ஒருசில பிரச்சனையைத் தீர்க்க உதவுகின்றது. ஆனால் அது வேறு புதிய புதிய பிரச்சனைகளை உருவாக்குகின்றது.

                விஞ்ஞானம் என்ற சொல்லை விக்னா+ஞானம்=விஞ்ஞானம் என்று பிரித்துப் பார்க்கலாம். விக்ன என்றால் உடைத்தல், சிதைத்தல் என்று பொருள். விஞ்ஞானம் என்றால் உடைத்துப் பார்க்கின்ற அறிவு, சிதைத்துப் பார்க்கின்ற அறிவு என்று பொருள். இந்த விஞ்ஞானம் விஞ்ஞானிகளால் மூன்று வகையாகப் பகுக்கப்படுகிறது. அவை 1. பௌதீக இயல் 2. ரசாயண இயல் 3. உயிரியல் என்பனவாகும்.

                மனித வாழ்வுக்கு ஏற்றதாகவும், எளியதாகவும் விஞ்ஞானம் மாறி வருகிறது. கற்கால மனிதனின் இடப்பாடுகளையும் தற்கால மனிதனின் வாழ்க்கை வசதிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விஞ்ஞான வளர்ச்சியின் பயனைத் தெளிவாக உணரலாம். ஆனால் புறஉலகப் பொருள்வாழ்க்கை மட்டுமே மனிதனுக்கு உண்மை யான மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்துவிடுவதில்லை. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் காலத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்தித் தந்திருக்கின்றன. சேமித்து வைக்கப்பட்ட காலமும் சக்தியும் செலவிடப்படும் முறையில்தான் அமைதியும் மகிழ்ச்சியும் அடங்கி இருக்கின்றன.

                புறவசதிகள் கொண்ட மனிதர்கள் பலர் மன அமைதி பெற முடியாமல் அல்லற்படுவதைக் காணலாம். இயற்கையை வென்று தம் விருப்பத்திற்கேற்ப அவைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் அறிவுத்திறன் கொண்ட வளர்ந்து விட்ட நாடுகளில் வாழும் பலர் மன அமைதியும், மகிழ்வுமின்றி வாழ்கின்றனர். விஞ்ஞானதுறைகள் ஆராய்கின்ற புற உலகம் மனித வாழ்வின் ஒரு பகுதி; மற்றொரு பகுதியான மனிதனின் `அகம்வளர்ந்து பண்படவில்லை யென்றால் புறவசதிகளால் நற்பயன் ஏதும் விளையாது.

                ஓர் அறிவியல் அறிஞர் ஏதோ ஒரு கருத்தைச் சொல்லுகிறார். அவருக்கு ஒரு நோபல் பரிசு கிடைக்கலாம். பின்னர் வேறு ஒருவர் முன்னதாகச் சொன்ன கருத்தை உடைத்தெறிந்து விட்டு மற்றொரு கருத்தை முன்வைக்கிறார். மொத்தத்தில் விஞ்ஞானத்தில் நிகழ்வது என்னவென்றால் அணுக்களை மாற்றி அமைக்கப்படுவது மட்டுமே. இந்த கண்டுபிடிப்புகள் இயற்கை உருவாக்கியுள்ளவற்றை சிதைப்பதற்காகப் பயன்படுகின்றன. அது தன்னைத் தானே தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்கின்ற ஒரு இயந்திரமாக மாற்றுகின்றது. இதிலிருந்து விடுபட இயல்பான அறிவு அவசியமாகின்றது.

                விஞ்ஞானத்தில் புறப்பொருட்களில் அளவு கடந்த புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றோம். இதன் பயன்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இது விஞ்ஞானத்தின் வழியாக உணரப்படும் தன்மையாகிய இன்ப உணர்வு என்ற ஒன்றை அதன் மேல் ஏற்றி வைத்துள்ளது. இந்த விஞ்ஞானத்தில் புலன் உணர்வு செயல்பாட்டின் இன்ப அம்சத்தின் வளர்ச்சியை மட்டுமே வளர்ச்சியடையச் செய்கிறோம். இதனால் உணர்வு செயல்பாட்டின் இன்ப அம்சத்தைப் பற்றி அதிகம் ஆர்வம் காட்டுகிறோம். இந்தத் தவறான வழிகாட்டலால் நமது சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம். தவறாகச் செலவு செய்து கொண்டு மாயையில் உழன்று கொண்டு இருக்கின்றோம். நமது சக்தி வீணடிக்கப்பட வில்லையெனில் வாழ்க்கை மிகவும் எளிமையானதாகி விடுகிறது.

                விஞ்ஞான அறிதல் இல்லாமல் உங்களால் எதையும் அனுபவித்து உணரமுடியாது. உங்களுக்குத் தெரியாத ஒன்றை உங்களால் உணரமுடியாது. விஞ்ஞானத்தில் அறிதல்தான் அனுபவத்தை உருவாக்குகிறது. அனுபவம் விஞ்ஞான அறிதலைப் பகுத்து உணரச் செய்கிறது. உயிர் வாழும் ஒவ்வொரு கணத்திலும் நமக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதையும் நமக்குள்ளே என்ன நடக்கிறது என்பதையும் நாம் அறிந்தாக வேண்டும். இந்தத் தொடர்ச்சியான நிலையை நிலை நிறுத்துவதற்கான ஒரே வழி இயல்பான நிலையை அறிவதுதான்.

                விஞ்ஞான மயமான நூல்களைப் படித்து எந்திரத்தனமாக ஒப்பிப்பதில் என்ன நன்மை இருக்கிறது. நம்முடைய உணரும் இயல்புணர்வால் விஞ்ஞானத்தைப் பகுத்தறிந்து நமது இயல்பை தெரிந்து கொள்ள வேண்டும்.

                ``விஞ்ஞானத்தின் பயன்பாடுகள் மதிப்பீடுகளை அறிந்து மறுமலர்ச்சி ஏற்பட வழி செய்கிறது. இயல்பான உயரிய சிந்தனையால் மனிதனிடம் உள்ள இயல்புணர்வுகளை வளர்த்திடச் செய்து இயல்பான ஏழாவது அறிவால் அறியச் செய்கிறது’’.


No comments:

Post a Comment